ஒரு பார்வை

அன்புமிக்க தமிழ் உறவுகளுக்கு இன்முகத்துடன் இந்த அழைப்பு. வருகிற 2017 சூன் 9-10-11 மூன்று தினங்களும் திருநாளாகும். புலம் பெயர்ந்து வாழும்தமிழ் எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும் விருந்தோம்பி வரவேற்போம். அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழ்க்கைப் பயணத்துடன் தம் தாய்மொழி ஏற்றம்பெற மொழித்தொண்டும் மேற்கொண்டுள்ளனர். தங்கள் வாழ்வுச் சூழலுடன் எழுத்தாளர்களாகவும், படைப்பாளர்களாகவும், கவிஞர்களாகவும் பரிணமித்துள்ளனர். தாயகத்திலிருந்து பிரிந்தாலும் தம் மொழி உறவுகளுக்காக குரலெழுப்பி, காதல், நகை, வீரம், போராட்டம், வணிகம், இலக்கியம், வாழ்வியல், வரலாறு என தம் உணர்வுகளையெல்லாம் தமிழன்னை முன் படையல் செய்கிறார்கள். வாழ்க்கைப் போராட்டங்களுடன் இலக்கியம் படைக்கிறார்கள். எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும் அயலகத் தமிழ் அறிஞர்களையும் தாய் மண்ணுக்கு அழைப்போம். அவா்தம் படைப்புகளை படையலிடுகிறோம். உள்ளே செல்லுங்கள். சுவைத்துப் பாருங்கள்.

தமிழர்களின் அடுத்தக் கட்டப் புலம்பெயர்வு 17ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தமிழகத்திலிருந்து தமிழர்கள் மிகுதியாகப் புலம்பெயர்ந்ததாகத் தெரியவருகிற்து. இத்தகைய புலம் பெயர்வு தாய்த்தமிழகத்திலிருந்து தமிழர்கள் மிகுதியாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவுகள், ரீயூனியன் முதலிய நாடுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தேயிலை, இரப்பர், கரும்புத் தோட்டங்களுக்கு பெருந்தொகையாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆக அந்த வகையில் புலம் பெயர்ந்தோர் வாழ்வியல் இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதியப்பட வேண்டிய செய்தியாகும். நிகழ்காலத்தில் நம் கண் முன்னர் இலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையில் நடந்த புலம் பெயர்வுகளையும் நாம் அறிவோம்.

தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் குறித்துப் பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டாலும், தாயகம் கடந்த நம் தொப்புள்க்கொடி உறவு முறை தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், தெரிந்தோ தெரியாமலோ தாய்த்தமிழகத்தில் அதிகமாகக் கவனம் செலுத்தப்படவில்லை என்ற குறையினை நிவர்த்திக்கின்ற வகையில், இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை தாய்த் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடத்துகிறோம். இம் மாநாடு, தினமணி ஊடகத் தோழைமையுடனும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஆதரவுடனும், வி.ஐ.டி. தொழில்நுட்ப பல்கலைக் கழகமும், வைகை இலக்கியக் கழகமும் இணைந்து நடத்துகின்றன. இம்மாநாட்டில் புதுதில்லி கே.எம்.எஸ். கலை உலகமும் பங்குபெறுகின்றன.

முதல் மாநாட்டை தாயகம் கடந்த தமிழ் எனும் பெருமையோடு சிங்கப்பூரில் 2011ல் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திக் காட்டியது. அதன் தொடர்ச்சியாக இம்மாநாடு உலகத் தமிழ் எழுத்தாளர் இரண்டாம் மாநாடு ஏற்பாட்டுக் குழுவினரால் சென்னையில் நடத்தப்பட இருக்கிறது.

இம்மாநாட்டில் 12 அமர்வுகள் நிகழ இருக்கின்றன. கருத்தரங்க அமர்வுகளில் முழுக்க முழுக்க தாயகம் கடந்த தமிழ் எனும் புலம் பெயர்ந்த அயலகத் தமிழ் இலக்கியங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். கருத்தரங்கத்தின் ஒவ்வொரு அமர்வுகளுக்கும் சாகித்திய அகதெமி விருதினைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் தலைமை ஏற்பார். அமர்வில் கட்டுரை வாசிப்போர் அயலகத் தமிழ் எழுத்தாளர்களாக இருப்பர். கருத்தரங்கத்தில் பங்குபெற விழைகின்ற அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுப் பதிவு அலுவலக, செயல் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கப் பேராளர்களைத் தேர்வு செய்து மாநாட்டுச் செயல் அலுவலகத்திற்குப் பரிந்துரைக்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் தமிழ்த்திரு.நா.ஆண்டியப்பன் அவர்கள் பேருவகையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியினைப் பதிவு செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் பங்குபெற இருக்கிறார்கள்.

மாநாட்டில் கருத்தரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடக நிகழ்ச்சி, தொன்மையான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, மங்கல இசை, அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று கூடும் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் நிகழ இருக்கின்றன. அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு, விற்பனை செய்யும் புத்தக அரங்கமும் நிறுவப்படுகிறது.

மாநாடு வெற்றியடையவும், அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும், மாநாட்டு மலருக்கு விளம்பரம் பெற்றிடவும், நன்கொடை பெற்றிடவும், அயலகத் தமிழ்ச் சான்றோர்களும் எழுத்தாளர்களும் புரவலர்களும் பேராதரவு தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இந்தியத் திருநாட்டில் பிற மாநிலங்களில் சீரோடும், சிறப்போடும் தமிழ்ச் சங்கத்தினை நடத்திவரும் புதுதில்லி, புவனேஸ்வர், கொல்கத்தா, திருவனந்தபுரம், பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட தமிழ்ச்சங்கம் மற்றும் நவீமும்பைத் தமிழ்ச்சங்களோடு, மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் செயல் உறுப்பினர்களையும், இம்மாநாட்டிற்கு ஆதரவு கோரி நேரில் அழைக்க இருக்கிறோம் என்பதோடு, இம்மாநாடு வெற்றிபெறத் தமிழ் எழுத்தாளராகிய தங்களது பங்களிப்பையும் தந்திட வேண்டுகிறோம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், மற்றும் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ் துறையினரையும் மாநாட்டிற்கு ஆதரவு கோரி அணுக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்து, இம்மாநாடு மிகச் சிறப்பாக வெற்றியடைய தமிழ் எழுத்தாளர்களாகிய உங்களது பங்களிப்பினை தந்திட வேண்டும் என்று கரம் குவித்து வேண்டுகிறோம்.

நன்றி!